
ஓய்வு பெறுவதற்கு இலங்கை சிறந்த நாடு – உலகப் புகழ்பெற்ற அமெரிக்க இதழ் பரிந்துரை
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பயண இதழான ”TRAVEL + LEASURE” இலங்கையை ஓய்வு பெறுவதற்கு சிறந்த நாடாகப் பரிந்துரைத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் வாழ்க்கைச் செலவு குறைவாக இருக்கின்றது என்ற அடிப்படையில் ஓய்வு பெறுவதற்கு இலங்கையை சிறந்த நாடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான செலவுகள் மிகக் குறைவு என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல வெளிநாட்டினரிடையே பிரபலமான கடல் உணவுகளான நண்டு, இறால், மீன் மற்றும் சிப்பிகள் ஆகியவற்றின் விலை 35 டொலர் மாத்திரமே எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவு மற்றும் பானங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்பதும், இரண்டு பேருக்கு ஒரு புதிய மீனின் விலை சுமார் 3.50 டொலர் எனவும் அன்னாசிப்பழத்தின் விலை 0.20 டொலர் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேர ரயில் பயணத்திற்கு ஒரு டொலர் செலவாகும், மூன்று மைல் டுக்-டுக் பயணத்திற்கு சுமார் இரண்டு டொலர் செலவாகும் என்பதால், போக்குவரத்து மற்றொரு பாரிய செலவை மிச்சப்படுத்தும் என்றும் அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.
ஓய்வு பெறுவதற்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தரமான, மலிவு விலை சுகாதாரப் பராமரிப்பாகும்.
கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் நவீன வசதிகளுடன் வலுவாக இருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
