நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உட்பட விபத்துக்களை கருத்திற் கொண்டு பண்டிகை கால விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முக்கியமாக பொதுப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளை சோதனையிடுவதுடன், மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவனை மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இயங்கினால், 119 மற்றும் 1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களிலோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர்ப்புறம், மேல் மாகாணம் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து பிரிவுகளின் 0718591967, 0718591741, 0718592857, 0718592278 என்ற அலைபேசி இலக்கத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம்.
போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான காணொளிகள் இருப்பின் அவற்றை அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.