ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் இந்த சூழ்நிலையில், துணைத் தலைவரான கில் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கில் சிறிது காலம் அணியை வழிநடத்தினார்.

பின்னர் ரோகித் விளையாட திரும்பினாலும், அவர் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற பயிற்சி அமர்வுகளில் ரோகித் பங்கேற்கவில்லை. ரோகித் தனது பெரும்பாலான நேரத்தை பயிற்சியாளர் கம்பீருடன் போட்டி தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், காயம் பெரியதாக இல்லாவிட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு நியூசிலாந்து மற்றும் இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டதால், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதல்ல.

இந்த சூழ்நிலையில், அணி நிர்வாகம் ரோகித்துக்கு ஓய்வு அளித்து கில்லை தலைவராக நியமிக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Share This