அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை
அரச வைத்தியசாலைகளில் சுமார் 530 கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
கதிரியக்க தொழில்நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 1,150 ஊழியர்கள் காணப்பட வேண்டும் எனினும், தற்போது 620 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதாக அவர் கூறினார்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக கதிரியக்க நிபுணர்கள் நியமனம் செய்யப்படாமையால் நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஒன்றரை வருடத்திற்குள் 80க்கும் மேற்பட்ட கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பதவிக்கு 110 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், சுகாதார அமைச்சின் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பயிற்சிப் பாடசாலையில் உயர்தர டிப்ளோமா பயிற்சியை முடித்த 41 டிப்ளோமாதாரர்கள் எட்டு மாதங்களாக சேவையில் இணைவதற்கு காத்திருப்பதாக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.