நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளயதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் நகர்வுகள் பாஜகவை நோக்கி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சீமான் நேற்று இரவு நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.
நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது சீமான் அரசியல் தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பு 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான சந்திப்பா? அல்லது பாஜகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இணையுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததில்லை. கட்சி தொடங்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.