டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு பலகப்படுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஐந்தாம் திகதி பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான பொது எதிர்ப்பை எதிர்கொண்டு ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
பின்னர் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது, மேலும் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதற்காக ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளது.
இத்தகைய பின்னணியில், இந்தியாவில் மறைந்திருக்கும் ஷேக் ஹசீனா, தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சூழ்நிலை காரணமாக, போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டன, மேலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஒன்லைனில் நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொதுத் தேர்தல் அடுத்த பெப்ரவரியில் நடைபெற உள்ளது.
