ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) காலை 9.30 அளவில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

மேலும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

மேலும் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்க நேற்று காலை (22.08) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )