சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் , கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவன் கடிதம் எழுதியுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சு கடந்த 02 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாக சபையின் கீழ் செயற்படும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்திருந்தார்.

 

Share This