10 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 195,000 கோடியைத் தாண்டியது

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களுக்கு அமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20.1 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டோபரில் மட்டும், 712 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்புவது சமீபத்திய காலங்களில் நேர்மறையான போக்கைப் பேணி வருவதாகவும், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருவாய் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது,
இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 2.34 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 5.3 சதவீதம் அதிகமாகும்.
