ரணில் கைது – எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமூக ஊடக கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, 2022ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவை அடைந்தபோது அதைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் அவர் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும், ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் மேலும் கேட்டுக்கொள்கிறார்.
இதேவேளை, தனது பதவி காலத்தில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இறுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.