சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் நாட்டை வந்தடைந்தார்

2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டை வந்தடைந்தார்.
அவர் இன்று அதிகாலை 4.45 க்கு சீனாவின் குவாங்சோவிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-881 மூலம் நாட்டை வந்தடைந்தார்.
பிரதமர் தனது மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளா நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பயணம் மற்றும் பல தசாப்தங்களாக சீனாவின் சமூக மற்றும் பொருளாதார மாற்றம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற இந்த அருங்காட்சியகப் பயணம் வாய்ப்பை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அருங்காட்சியகப் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சென்றார், அங்கு Huawei Technologies பிரதிநிதிகள் ஸ்மார்ட் வகுப்பறை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இது இலங்கையின் கல்வித் துறைக்கான சாத்தியமான பயன்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீன அரசு மற்றும் ஐ.நா. பெண்கள் இணைந்து ஏற்பாடு செய்த “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் அனைத்து வகையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெண்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கடந்த 11 ஆம் திகதி சீனாவுக்குப் புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் அமரசூரிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்கள் குடியரசின் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்றார்.