உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து
பெரும் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து அனைவரின் கவலைக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் கொள்ளையடிக்கப்படுவதற்கும் நிதி ஒதுக்கப்படாது என்பதையே தான் கூறியதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
உள்ளூராட்சி மன்ற கொள்கையைப் பின்பற்றாமல் நிதியை தவறாகப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதைஅனுமதிக்க முடியாது என்றே நான் கூறினேன்” என பலரதும் கவலைகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போது மாற்றம் தொடர்பிலும், தெற்கிலே மக்கள் மாற்றமொன்றை ஏற்படுத்தும் வேளையில் வடக்கு மக்கள் அதற்கு ஆதரவாக மற்றும் பங்காளிகளாக இல்லாமல் இருக்கிறார்கள் என்றொரு கருத்தும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அப்போது ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த போதிலும் அனுரகுமார திசாநாயக்கவுக்காக குரல் கொடுத்திருந்தார்.
தோழர் அனுரகுமார இந்த வார்த்தைகளை இனவாத உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் கூறியதாக நான் நினைக்கவில்லை. எனக்கும் அவரை நன்றாக தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல என்றும் அவர் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் அவர் ஏற்படுத்த விரும்பும் மாற்றங்களுக்காக அவருடன் இணைந்து செயற்பட தயார் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறிருக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஜனாதிபதியின் அண்மைய கருத்து தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் கவலை வெளியிட்டிருக்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் வராத உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் கருத்து வாக்காளர்களுக்கு மீண்டும் மீண்டும் லஞ்சம் வழங்குவது போன்று. இது தேர்தல் குற்றமாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சரியான நிலைமைகளை உருவாக்குவதை உறுதி செய்வதே ஜனாதிபதியின் செயற்பாடுகளில் ஒன்று” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது விமர்சனங்களுக்கு ஜனாதிபதி பதிலளித்துள்ள நிலையில் சுமந்திரனும் அவரது கூற்றை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளாரா அல்லது ஜனாதிபதிக்கும் சுமந்திரனுக்கும் ஏதேனும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியை உடனடியாக அங்கீகரிக்க முடியும் என்று கூறினார்.
இருப்பினும், ஏனைய கட்சிகளால் நடத்தப்படும் சபைகளுக்கும் இதனைச் செய்ய முடியாது, ஏனெனில் அவை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. முழுமையான பரிசீலனை தேவை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கவலை வெளியிட்டு வந்த நிலையில் அதனை ஜனாதிபதி நியாயப்படுத்தியிருக்கிறார்.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் செயற்பாடாகும் என்று பெப்ரல் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுகிறது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த பதில் முற்றுப்புள்ளியாக அமையுமா அல்லது தொடர்கதையாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.