சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர – ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கான சீனாவின் உதவியுடன், பொருளாதார மீட்சிக்கான சீனாவின் ஆதரவு குறித்து விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவிற்கு அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்நாட்டிற்கு செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
மேலும் சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரையும் ஜனாதிபதி அநுரகுமார சந்திக்கவுள்ளார்.
முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் அடங்கும் என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கு சீனாவின் ஆதரவை இலங்கை நாடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீன்வளத் துறை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மீனவர்களுக்கு வீட்டுவசதித் திட்டத்தை வழங்குவது உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை உள்ளடக்கும், அதே நேரத்தில் விவசாயத் துறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஆதரவைப் பெறும்.
சீன உதவியுடன் சூரிய மின்சக்தித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றில் உள்ளடக்கப்படுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் துறை குறித்த பேச்சுவார்த்தைகள், இலவச பாடசாலை சீருடை துணிகளைப் பெறுவதிலும், பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் போர்டு திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வாகன அசெம்பிளி ஆலைகளை ஜனாதிபதி பார்வையிடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.