நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தபால் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்களும் வேலைநிறுத்தம் காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனினும், தங்கள் கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்க கலந்துரையாடலுக்கு வாய்ப்பு வழங்காமையால், இன்றும் வேலைநிறுத்தத்தைத் தொடரப்போவதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார்.
விடுமுறை நாட்களும் ரத்து செய்யப்பட்ட பின்னணியில் தபால் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.