கொங்கோவில் அமைச்சர் ஒருவருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தி சன் செய்தித்தாளின்படி, கின்ஷாசாவிலிருந்து திரும்பிய விமானம், காலை 11 மணியளவில் தரையிறங்கியது, இதன்போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தை அடுத்து விமானத்தில் வால் பகுதியில் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் அவசரகாலக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பயணிகளை வெளியேற்றினர். தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
விமான நிலையத்திலிருந்து வந்த காட்சிகளில், விமானத்தின் வால் பகுதி மற்றும் பின்புறப் பகுதி தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்தன, அடர்த்தியான கருப்பு புகை எழுந்தது.
அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தினர், ஏனையவர்கள் பயணிகளை வெளியேற்ற உதவினர்.
விமானத்தின் முன்பக்கத்தில் இருந்த பயணிகள் விமானப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி விரைவாக வெளியேறினர், சிலர் இடிபாடுகளில் இருந்து தப்பி ஓடினர்.
கடந்த வார இறுதியில் செப்பு சுரங்கத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் கபாம்பா (63) மற்றும் அவரது குழுவினர் கலோண்டோ சுரங்கத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
எம்பிரேயர் விமானம் அங்கோலாவின் ஏர்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது. மேலும் தோல்வியடைந்த தரையிறக்கம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
