எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

நாட்டில் அண்மைகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நாளாந்தம் பதிவாகும் செய்திகளில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கொலை சம்பவங்களும் பதிவான வண்ணமே காணப்படுகின்றன.

இவற்றில் சில சம்பவங்களுக்கு தடையங்கள் கூட இல்லை. இதன்காரணமாக நாட்டில் மீண்டும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்து விட்டதா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

பல பிரதேசங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூடுகளும், பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளும் சாதாரண பொது மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை என்பதோடு துப்பாக்கிகளை பயன்படுத்தி இலக்கு வைக்கும் முறைமை கூட பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடாக இருக்குமா என சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

போதைப்பொருள் பாவனை குறைந்து விட்டதா எனக் கேட்டால் அதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இன்னுமும் போதைப்பொருள் பயன்பாடு காணப்படுகிறதை செய்திகளில் பார்த்தும் கேட்டும் அறிகிறோம்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியப் பொருட்களுக்கு காணப்பட்ட வரிசையானது, கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டிற்கு புதிய தலைவரை தெரிவு செய்ய கூடியது.

காலங்காலமாக காணப்பட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை சுமார் 56 இலட்சம் மக்கள் உருவாக்கினர். பெரும்பான்மையுடன் தற்போது ஆட்சியமைத்தும் வருகின்றனர்.

எனினும், நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்திடம் ஒழுக்கமான ஒரு நாட்டை எதிர்ப்பார்த்தனர். எனினும், இது வரையில் அது நடக்கவில்லை. இதனால் மக்கள் எதிப்பார்ப்புகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2025ஆம் ஆண்டு 16 நாட்களுக்குள் 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதுடன் பாதாள உலகக் குழுக்களின் தலையீடு இவற்றில் அதிகமாக உள்ளமை தெரியவருகிறது.

கடந்த காலங்களில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் ஓரளவுக்கு குறைவடைந்து காணப்பட்டாலும் கூட இவ்வாண்டில் அது அதிகரித்துள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.

இவ்வாறு பாதாள உலகக் குழுக்களின் தலையீடு அதிகமாக காணப்படுவதை சாதாரண ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதே அதற்கான காரணமும் ஆகும்.

இவ்வாறு பாதாள குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக பொதுமக்களால் சுதந்திரமாக பொதுவெளியில் நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளதுடன் மக்கள் பெரும் அச்சத்துடன் தமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது.

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதிலிருந்து மக்கள் அரிசியை விலை கொடுத்து வாங்குவதற்காக வீதி வீதியாக சென்று ஒவ்வொரு கடைகளில் ஏறி இறங்கி வருகின்றனர்.

நத்தார், புது வருட பிறப்பு, தைப்பொங்கல் ஆகிய பண்டிகைகளை மக்கள் போதிய அரிசி இன்றி கொண்டாட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளியது.

ஆக, நிம்மதியாக உண்டு வாழ முடியாத மற்றும் தனிமனித சுதந்திரத்தை அச்சுறுத்தும் ஒரு நாடாக இலங்கை மாறி விட்டதா என்றொரு அச்சம் தற்போது மக்கள் மத்தியில் எழுநு்து விட்டது.

பெறுமதியான வாக்குகளை வழங்க வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் போது மக்கள் சுமந்துக் கொண்டிருந்த அத்தனை எதிர்ப்பார்ப்புகளும் தூளாகி விட்டன.

கடந்த ஒவ்வொரு தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களிலும் இவ்வாறு பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகள் தூளாக்கப்பட்டதே நடந்து வந்தது.

எனினும், அரசாங்கம் இவை எதுவும் அறியாதவர்கள் போல இருப்பது ஏன் என்றொரு கேள்வியும் எழுகிறது.

அரிசி நெருக்கடிக்கு தீர்வாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத அநுர அரசாங்கம் வெறும் வாய் வார்ததைகளால் மாத்திரம் மார்தட்டி வருகிறது.

அரசாங்கமாக பதவியேற்று மூன்று மாதங்கள் தாண்டிய போதிலும் இன்னும் எதிர்க்கட்சிகளைப் போல கடந்த அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி வருகிறது தற்போதைய அரசாங்கம்.

இந்நிலை மாற வேண்டும், தலைதூக்கியிருக்கும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

க்ளீன் ஸ்ரீலங்கா எனும் பெயரில் சிறு சிறு விடயங்களில் அவதானம் செலுத்தி பாரதூரமான பிரச்சினைகளை அரங்கேற விடுவது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளால் பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன. அரிசிக்காக மக்கள் அவதிப்படுகின்றனர்.

இலங்கை மக்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், உண்மையிலேயே மக்கள் அபிலாஷைகளை பூரணப்படுத்துகின்றதா? இது வரையில் இல்லை. மக்களின் மனநிலையும் எதிர்ப்பார்ப்புகளை கைவிட்டதாகவே தெரிகிறது.

 

(இன்றைய ஒருவன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

Share This