
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டில் வட மாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என சுட்டிக்காட்டினார்.
வட மாநிலத்திவர் தமிழகத்தில் வேலை செய்ய முடியும் எனவும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வாக்குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். எனவே, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
இதேவேளை, ஜனவரி ஒன்பதாம் திகதி கடலூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்படும் குறித்த மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு தொடர்பில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
