
நெடுந்தீவுக்கு உயிரிழந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்
நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், உயிரிழந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது
குறிகாட்டுவான் இறங்கு துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை, நெடுந்தீவில் உள்ள அரச திணைக்களங்களில் வேலை செய்வோர், நெடுந்தீவுக்கு தேவை கருதி செல்வோர், சுற்றுலா செல்வோர் உள்ளிட்டவர்களுடன், மேலதிகமாக வெள்ளநிவாரணம் வழங்குவதற்கான அரச உத்தியோகஸ்தர்கள், வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் குழுவினர் என 150க்கும் மேற்பட்டோர் நெடுந்தீவு செல்வதற்காக காத்திருந்தனர்.
குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரகை படகு, வந்த வேளை அதில் ஏறுவதற்கு பலரும் முயன்ற வேளை அந்த படகில் 100 பேரை மாத்திரமே ஏற்ற முடியும் என கடற்படையினர் திடமாக கூறி விட்டனர்.
அதனால் ஏனையோர் நெடுந்தீவு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.
இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர், நெடுந்தீவு பிரதே செயலர், யாழ்.மாவட்ட செயலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வேளை நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், குமுதினி படகும் பழுதடைந்துள்ளமையால், சேவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
பின்னர், இறந்தவரின் சடலத்துடன், குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி தனியார் படகு புறப்படவுள்ளதாகவும், அந்த படகில் ஏறி செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
அதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவ்விடத்தில் குழப்பமான நிலைமை காணப்பட்டது.
பின்னர் , பிறிதொரு தனியார் படகு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கிருந்த அனைவரையும் நெடுந்தீவு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது
நெடுந்தீவில் வேலை செய்யும் பலரும் சனி ஞாயிறுகளில் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் திங்கட்கிழமை நெடுந்தீவு நோக்கி செல்வதால் , திங்கட்கிழமை காலையில் அதிகளவானோர் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நிவாரண பணிகளுக்காக மேலும் பலரும் வருகை தருவார்கள் எனவும் தெரிந்த நிலையில் பயண ஒழுங்குகளை உரிய முறையில் செய்யாது, இருந்த அரச உயர் அதிகாரிகளை பலரும் கடிந்துகொண்டனர்.
