சதொசவுக்கு உரித்தான நெல் களஞ்சியசாலைகள் இன்று முதல் திறக்கப்படும்
சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்த தெரிவித்த அவர்,
கடந்த காலங்களை விடவும் அதிகளவான உத்தரவாத விலையை தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ளது. உத்தரவாத விலையைக் கடந்த ஆண்டை விடவும் 15 ரூபாய் அதிகமாக நிர்ணயித்துள்ளோம்.
உத்தரவாத விலை நியாயமானது என பெரும்பாலான விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் அரசியல் நோக்கங்களுக்காகச் சிலர் குறித்த விலை போதாது என்கிறார்கள்.
எதிர்வரும் 15 முதல் 20 ஆம் திகதியாகும் போது நெல்லுக்கான விலை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறிய முடியும். விவசாயிகளிடமிருந்து 10 முதல் 15 சதவீதமான நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
எனவே, 230 ரூபாவுக்கு குறைவான விலையில் நாடு அரிசியை வழங்கும் எதிர்பார்ப்பிலேயே நெல்லுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான 36 களஞ்சியசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் நெல் கிடைக்கும் அளவுக்கு ஏற்ப இன்று முதல் மேலும் களஞ்சியசாலைகள் திறக்கப்படும்.
இந்த மாத இறுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள 220 நெல் களஞ்சியசாலைகள் ஊடாக அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.