ஆபரேஷன் சிந்தூர் சர்வதேச அளவில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் ஆற்றும் உரையின் போதே இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படை வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நாட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது, மேலும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
இன்று ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக திரண்டுள்ளது. இன்று ஒவ்வொரு இந்தியரின் தீர்மானமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதேயாகும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நமது படைகள் துல்லியமாக தாக்கி அழித்தது அசாதாரணமானது.
ஆபரேஷன் சிந்தூர் வெறும் இராணுவ நடவடிக்கை மட்டும் இல்லை. அது நமது உறுதிப்பாடு, தைரியம் மற்றும் இந்தியாவின் மாறிவரும் சித்திரம். இந்தச் சித்திரம், நாட்டை தேச பக்தியால் நிரப்பி, அதனை மூவர்ணக்கொடியின் வண்ணங்களால் வரைந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. பல குடும்பங்கள் அதனை தங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
பிஹாரின் கதிகாரில், உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மற்றும் பல நகரங்களில் அந்த காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெயர் வைத்துள்ளனர்.
நமது வீரர்கள் பயங்கரவாத தளங்களை அழித்தனர். அது அவர்களின் அசாத்திய துணிச்சலாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களாலும் சாத்தியமானது. இந்தப் பிரச்சாரத்துக்கு பின்பு, உள்ளூர் மக்களுக்கான குரல் குறித்து நாடு முழுவதும் ஒரு புதிய ஆற்றல் வளர்ந்துள்ளது.
ஒரு பெற்றோர், தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்காக இந்திய தயாரிப்பு பொருள்களையே வாங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளனர். தேசபக்தி குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்குகிறது. பல இளைஞர்கள் இந்தியாவிலேயே திருமணம் என்று உறுதி எடுத்துள்ளனர். மேலும் சிலர் இனி தாங்கள் வழங்கும் எந்த ஒரு பரிசு பொருள்களும் இந்திய கைவினைஞர்களின் தயாரிப்பாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்” என்றார்.