ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் – மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது. இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகன் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இது ஜனநாயகத்தை கொன்று, நாட்டின் பன்முகத் தன்மையை அழித்துவிடும்.
அதுமட்டுமின்றி நாட்டை ஒற்றையாட்சி வடிவத்தின் அபாயங்களுக்குள் தள்ளிவிடும். இந்த மசோதா அமுலாகி நடைமுறைக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டமே அர்த்தம் இல்லாமல் போய்விடும். பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும்.
மேலும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கு ஜனநாயக சக்திகள் போராட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.