நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்

நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழமைப்போன்று நுவரெலியாவில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் பொது அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையுடனும் கோலாகாலமாக
வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வசந்த கால கொண்டாட்டங்களுக்கு சமாந்தரமாக மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சுற்றுலாபயணிகளின் நலன்கருதி அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா மாநகரசபையும் , பயணிகளை பாதுகாப்பதற்கான விசேட சேவையை நுவரெலியா பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியாவிற்கு விசேட போக்குவரத்து பஸ் சேவை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா மாநகரசபை ஆணையாளர் எச்.எம்.பண்டார தலைமையில் வசந்த கால ஏற்பாட்டுக் குழுவின் கலை, கலாச்சார நடன நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக மத்தியமாகாண பிரதான செயலாளர் ஜி. எச்.எம். அஜீத் பிரேமசிங்க உட்பட நுவரெலியா மாவட்ட செயலாளர், நுவரெலியா பிரதேச சபை செயலாளர் , இராணுவஅதிகாரி, பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Share This