யானைகளை மீளப் பெருவது குறித்து பேசவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை திரும்பப் பெறுவது குறித்து இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பிரசாத் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த யானைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவால் தொகுக்கப்பட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், யானைகள் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
யானைகள் தொடர்பாக ஆய்வு செய்ய தாய்லாந்து நாட்டின் இரண்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுசார்ட் சோம்க்ளின் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும், இதன் போது யானைகளின் மருத்துவ அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
“தாய்லாந்துடனான இருதரப்பு நல்லெண்ணத்தை வலுப்படுத்த இந்த யானைகள் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டன. அவை தற்போது ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் களனி ராஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
