
முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்து, அவரது முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், அடப்பனவில்லுவ பகுதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று (22) கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் இறந்தவர் அப்துல் லத்தீப் என்ற 75 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது, அவர் பெப்ரவரி 21 ஆம் திகதி தனது முச்சக்கர வண்டியில் வாடகை பயணம் ஒன்றுக்காக வீட்டை விட்டு வெளியேறினார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் அன்று இரவு 9.30 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்துள்ளார், அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் அவருடன் வாடகைக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
முச்சக்கர வண்டியைத் திருடுவதற்காக சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி சாரதியின் கழுத்தில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சடலத்தை கைவிட்டு, சந்தேக நபர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட முச்சக்கர வண்டி பின்னர் புத்தளம் முல்லை வீட்டுவசதி வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அதன்படி, பொலிஸார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், பணத்தையும் முச்சக்கர வண்டியையும் திருடும் நோக்கத்துடன் இந்தக் கொலை செய்யப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
