
துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இன்று அதிகாலை 5.20 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் எல்பிட்டிய, ஊரகஹா பகுதியைச் சேர்ந்த புஞ்சா என அழைக்கப்படும் 52 வயதான ரவின் சமிந்த வீரசிங்க மற்றும் கந்தானை பகுதியைச் சேர்ந்த கிரில்தெனியகே டொன் ரசிக சஞ்சீவ குமார என்ற 30 வயதுடைய சுட்டி மல்லி ஆகியோர் அடங்குவர்.
அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசாங்க பண மோசடி வழக்கு தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு தேடப்பட்டு வந்த ரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய நிஷாமணி டி சில்வா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலை 06.50 மணிக்கு புஞ்சா என்கிற ரவீன் சமிந்தவை மேற்கு வடக்கு பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், ரசிக சஞ்சீவ என்கிற சுட்டி மல்லியையும் எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், நிஷாமணி டி சில்வாவை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையக அலுவலகத்திற்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
