ஜனாதிபதி – ஜப்பான் நிப்பொன் மன்றத் தலைவர் இடையே சந்திப்பு
![ஜனாதிபதி – ஜப்பான் நிப்பொன் மன்றத் தலைவர் இடையே சந்திப்பு ஜனாதிபதி – ஜப்பான் நிப்பொன் மன்றத் தலைவர் இடையே சந்திப்பு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-07-at-16.27.28.jpeg)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்றது.
இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா தெரிவித்தார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்க தனது அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நாட்டின் கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக விசேட திட்டங்களைத் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன் போது கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா (Akio ISOMATA) , சசகாவா சுகாதார மன்றத்தின் தலைவர் கலாநிதி டகஹிரோ நன்ரி(Takahiro Nanri), நிப்பொன் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இசிரோ கபசாவா(Ichiro Kabasawa) உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.