இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்

இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள்  – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்

கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன.

இதன்படி, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (31) குற்றப் புலனாய்வு பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்கெடுக்கப்பட்டுள்ளது.

இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினராக கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த ஆறாம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவரையும் தவிர்ந்து இனிய பாரதியின் சகாக்களான செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ரமேஸ்கண்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த 2009ம் ஆண்டு திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006ஆம் டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ஆம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலி கொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாப்படுத்தினர்.

இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்தனர்.

இதற்கமைய இன்று பிற்பகல் நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This