
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து நேற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஒரு விடுதியில் மறைந்திருந்த நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு உயிருள்ள கையெறி குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
