மஹாபொல புலமைப்பரிசில் நிதி முறைகேடு – நளின் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் காலத்தில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் அவர் தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே வாக்குமூலம் அளிப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இந்தநிலையில், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கு ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மஹாபொல புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதிச் சட்டத்தின்படி, நிதி தொடர்பான முடிவுகள் நிதியின் தலைவருடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டும்.
எனினும், குறித்த காலத்தில், அவரைக் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
