லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது

லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.

துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் மறைந்திருக்க உதவியவர், பொரளை சஹஸ்புர பகுதியில் துப்பாக்கிதாரிக்கு உதவிய இரண்டு நபர்கள் உட்பட 06 பேர் தற்போது பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காலி அகுலுகஹவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தி கொடுத்த வலானையில் உள்ள ஒரு வாகன திருத்தும் இடத்தின் உரிமையாளரும், அந்த மோட்டார் சைக்கிளை கொலையாளியிடம் ஒப்படைத்த இளைஞனும் வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட சிலர் நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 6 சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் உதவி ஒத்தாசைகளை வழங்கியமைக்காக மாத்தறை மற்றும் காலியில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அந்த 03 சந்தேக நபர்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு வெலிகம பொலிஸ் தலைமையகம் நீதிமன்றத்திடம் கோரியது.

அந்த கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க, அந்த மூன்று சந்தேக நபர்களையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

அதன்படி, அந்த மூன்று சந்தேக நபர்களும் மீண்டும் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This