கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல அடுத்த மாதம் 03 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பளம் வழங்கவும் ஊழியர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 08 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.
அத்துடன் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை தொடர்புடைய வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவரை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.