கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக, குறித்த வீதியின் கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டி – கொழும்பு

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை – கலகெதர ஊடாக கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இதே மாற்று வீதி ஊடாகவும் பயணிக்க முடியும்.

கம்பளை – கொழும்பு

கம்பளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கொழும்பிலிருந்து கம்பளை செல்லும் வாகனங்கள் மாவனெல்ல – ஹெம்மாத்தகம ஊடான மாற்று வீதியைப் பயன்படுத்த வேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலை

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இயலுமானவரை அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share This