மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்

மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்

“ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதி அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் சமாதான நகரத்தின் சகல மதங்களையும் அறவனைத்து செயற்பட்ட அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரர் நேற்றைய தினம்(26) இறைபதம் அடைந்த செய்தி எமக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“ஹட்டன் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக எல்லா இன மக்களாலும் நேசிக்கப்படும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மத்திய மாகாண பிரதம சங்கத் தலைவரும், ஹட்டன் ஸ்ரீ பாத தேசிய பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபரும், தர்ஷபதி, ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதியுமான அதி வணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரர், இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு மிக நீண்ட காலமாக நட்புறவோடு செயல்பட்டு வந்தவர்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடன் பிரதேசத்தின் ஒற்றுமை, அபிவிருத்தி, இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, எல்லா மதங்களையும் அரவணைத்து செயல்படுவது போன்ற விடயங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர். அதேபோல எனக்கும் மிக காத்திரமான ஆலோசனைகளை வழங்கி சமூகத்துக்கு சிறந்த தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு பங்காற்றி உள்ளார். மிகச் சிறந்த கல்விமானாகவும், இந்து, இஸ்லாம் மற்றும் கிருஸ்த்தவ மதங்கள் தொடர்பாக ஆழமான அறிவை கொண்டவராகவும், அனைத்து மதங்களையும் ஒன்றினைத்து பயணிக்கும் திறன்கொண்டவராக தேரர் அவர்கள் திகழ்ந்தார்.

தேரர் சுகவீனமுற்றிருந்த போதும் தனது உடல் நிலையும் பாராது எல்லா பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள தவறுவதில்லை. தேரரின் இழப்பு ஹட்டன் பிரதேசத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மேலும், அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரருக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் எமது இறுதி வணக்கத்தை கனத்த இதயத்துடன் செலுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This