பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது – கருணா ஆதங்கம்

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் நிரபராதியாக வெளிய வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது?
அதேபோன்று தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,
கிழக்கு மாகாணத்திலே முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதிலே முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனுடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார்.
அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன. பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள், என பல அவிருத்திட்டங்களை செய்திருந்தேன்.
அதுபோல் வியாழேந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார்.
இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுதான் நாங்கள் தற்போது இந்த உள்ளுராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கி இருக்கின்றோம்.
எனவே மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை தவற விடக்கூடாது. ஏனெனில் பல பிரச்சனைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன. ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள்.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு? தேர்தல் காலத்தில் மேய்சல் தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை. இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது, இதற்காக வேண்டித்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது. மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.
தவறான பிரசாரங்களை எடுத்து விடுவார்கள், இதனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், இதனை ஏனையோருக்கும் தெளிவாக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது. அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது.
தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான், இவை அனைத்தும் அரசியல் பழி வாங்கல்கள்.
இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும்.
பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அப்போது நிரபராதி என வெளிய வந்தவர்.
அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது கிழக்கு மாகாணத்திற்குரிய ஒரு அத்திவாரமாகும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னமாகும். அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும்.
நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு தலைவரும் இல்லை. தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்கு ஆள் சண்டை பிடிக்கிறார்கள்.
வடக்கு மக்கள் அவர்களை விரட்டியுள்ளார்கள். அவர்களை, கிழக்கிலும், விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்கள். இதனை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள்.
கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். ஆகவே எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.