காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேல் இரண்டாவது நாளாகவும் தொடர் தாக்குதல்

காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலின் முக்கிய தரைவழி தாக்குதல் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தொடர்ந்து காசா நகரத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு முழுவதும் பாரியளவான குண்டு தாக்குதல்களுக்கு மத்தியில் அல்-ரானிடிசி குழந்தைகள் மருத்துவமனை மூன்று தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காசாவில் இஸ்ரேல் மேற்கொள்வது இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழுவும் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலுக்கமைவே இனப்படுகொலை இடம்பெறுகிறதென்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆணே்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 251 பேர் பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைகளை ஆரம்பித்தது.
இந்த தாக்குதல் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 64 ஆயிரத்து 905 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.