மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?

மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?

இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே தெரிவிக்கப்படுவதால், இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான வட் வரி அறவீடு உள்ளதா என்பது குறித்து factseeker ஆராய்ந்தது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது, “இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது” என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும், நோயாளிகள் இன்னும் 18 சதவீத வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வட்-வரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் வட் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கூற்றுகளின் உண்மை தன்மைகள் குறித்து ஆராய்ந்த போது, 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட உரைகளை அவதானிக்க முடிந்தது.

இவற்றை ஆராய்ந்ததில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மருந்துகள் வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இவ் வரி விலக்கு பட்டியலில் மருந்துகள், மருத்துவ உற்பத்திப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை வட் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 18 வீத வட் வரி நீக்கப்பட்டுள்ளதுடன், “இலங்கையில் மருந்துக்களுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கூற்று தவறானது என்பதும் உறுதியாகின்றது.

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பொதிகளுக்கு பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்கள் வட் வரிக்கு உற்படுத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் IVவது இணைப்பில்,”2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெருமதி வரி சட்டத்தில் சில மாற்றங்கள்” முன்மொழியப்பட்டுள்ளன.

அந்த முன்மொழிவுகளில் ஒன்று, “இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பொதிகளுக்கு பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்களையும் வட் வரியிலிருந்து விடுவிப்பதாகும்”.

ஆகவே, மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வட் வரி நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கூற்றுக்கள் உண்மையானது என்பதையும் “இலங்கையில் மருந்துக்களுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கூற்று தவறானது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

நன்றி – FactSeeker

Share This