அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்புக்கு வழங்கப்படாமைக்கு சர்வாதிகார போக்கு காரணமா?

அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்புக்கு வழங்கப்படாமைக்கு சர்வாதிகார போக்கு காரணமா?

இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 6 போர்களை தான் நிறுத்தியதாகவும் தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் அந்த பரிசு வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாக போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார்.

நோபல் குழு வெளியிட்டுள்ள பதிவில், “நீடித்த அமைதிக்கு ஜனநாயகம் இன்றியமையாதது. இருப்பினும், ஜனநாயகம் பின்வாங்கும் உலகில் நாம் வாழ்கிறோம். சர்வாதிகார ஆட்சிகள் விதிமுறைகளை சவால் செய்து வன்முறையை நாடுகின்றன.

வெனிசுலா ஆட்சியின் அதிகாரத்தின் மீதான இறுக்கமான பிடிப்பும் மக்கள் மீதான அதன் அடக்குமுறையும் புதிது அல்ல. உலகளவில் அதே போக்குகளை நாம் காண்கிறோம். அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்தின் ஆட்சி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன. விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், மற்றும் சமூகங்கள் சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவமயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகின்றன.

இந்நிலையில் வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டு நோபல்அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்கக்கூடாது என்றும் அவர் அதற்கு தகுதியற்றவர் என்றும் கூட டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாமை பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்றத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சர்வாதிகார போக்கு ட்ரம்ப் அரசுக்கு பல வகையில் பொருந்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் மீதான கட்டுப்பாடுகள், கட்டாய நாடு கடத்தல்கள், வர்த்தக தடைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மாகாண போலீசாருக்கு பதிலாக மத்திய படைகளை நிறுவியது, தனது கட்டுப்பாடுகளுக்கு இணங்காத ஹார்வார்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கலை நிறுத்தியது, தன்னை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு நஷ்டஈடு கேட்டும் அரசு ரீதியாக கட்டுப்பாடுகள் மூலம் அழுத்தம் கொடுப்பது போன்ற டிரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் சர்வாதிகார போக்கை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )