தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை

தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை இரண்டு வீரர்களுக்காக செலவிட்டுள்ளது.

இந்தத் தொகை அணியின் திறன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தோனிக்குப் பிறகு எதிர்காலத்திற்கு சென்னை அணி தயாராகி வருவதையும் குறிக்கிறது.

தோனியை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு எதிர்காலத்திற்கான ஒரு உத்தியையும் ஒரு வாரிசை உருவாக்குவதையும் தெளிவாகக் குறிக்கிறது.

நேற்று செலவிட்ட தொகையே இதை பறைசாற்றுகின்றன. 19 வயதான கார்த்திக் சர்மாவை சென்னை 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

உர்வில் படேலை தக்கவைத்துக் கொண்டதன் மூலம், அணியில் இப்போது நான்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் (சஞ்சு சாம்சன், எம்எஸ் தோனி, உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா) உள்ளனர்.

2008 முதல் தோனியை மட்டுமே நம்பியிருக்கும் அணிக்கு இந்த நடவடிக்கை நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் சென்னை அணியின் உத்தியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.

சென்னை அணி தனது மொத்த கையிருப்பான 43.40 கோடியில் 60 வீதத்தை இரண்டு புதிய வீரர்களுக்காக மட்டுமே செலவிட்டது, இது அவர்களின் பாரம்பரிய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

44 வயதான தோனி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் அவரது சமீபத்திய அறிக்கைகள் அவரது வாழ்க்கை அதன் இறுதி கட்டத்தில் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

“நான் என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன் என்பதில் இருந்து தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை முழுமையாக முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை.

ஆனால் அடுத்த சீசனுக்கான உறுதியான உறுதிப்பாடுகள் இன்னும் எனக்கு இல்லை.” என்று தோனி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )