அநுர விக்ரமசிங்கவின் ஆட்சியா நாட்டில் நடைபெறுகிறது?
ரணில் – ராஜபக்சவின் ஆட்சி நடைபெறுவதாக கடந்த காலத்தில் நாம் விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். ஆனால், தற்போது ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை அவ்வாறே பின்பற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அநுர விக்ரமசிங்க ஆட்சியா நாட்டில் நடைபெறுகிறதென கேள்வியெழுப்புகிறோம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதும் அவரது இந்திய பயணம் தொடர்பில் எவ்வித கருத்துகளை முன்வைக்கவில்லை. இது குறித்து கவலையடைகிறோம். ஜனாதிபதியின் முதல் பயணமாகும் இது. இந்த பயணம் மற்றும் இதன்போது எட்டப்பட்ட உடன்பாடுகள் தொடர்பில் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சு தொடர்பிலான கூட்டறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது. இந்தியா இலங்கை இடையில் பாலம் அமைத்து தொடர்பில் நாம் பல்வேறு வகையிலும் சிந்திக்க வேண்டும். எமது சுயாதீனம், கலாசாரம் மற்றும் எமது வேலைவாய்ப்புக்காக பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் உடன்பாடுகளை இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளும் போது இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் அது இருக்க வேண்டும்.
எரிசக்தி தொடர்பில் ஏற்படுத்தும் உடன்பாடு மிகவும் முக்கியமானது. இந்திய – இலங்கை மின்சார இணைப்பு தொடர்பில் இரண்டு தசாப்தங்களாக நாம் பேசுகிறோம். அது தொடர்பில் உரிய பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். இருநாடுகளிலும் மின்சார பற்றாக்குறை ஏற்படும் போது பரிமாற்றிக்கொள்ள வேண்டும். கடல் மார்கமாக இதனை அமைக்கும் போது ஏற்படும் செலவுகள் தொடர்பில் உரிய இணக்கப்பாடுகள் ஏற்பட வேண்டும். இதுதொடர்பில் இந்தியாவுடன் மோதும் நிலை உருவானால் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடம்.
இந்தியா – இலங்கைக்கு இடையில் கேபிள் முறையில் உருவாக்கப்படும் இத்திட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் எவ்வாறு தொடர்புபடுகிறது. இதுதொடர்பில் துறைசார் அமைச்சராக ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தியாவுடனான உறவானது ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக்கொண்ணட உறவையும் விட மேலானதாக உள்ளது. அதனால் ணில் – ராஜபக்சவின் ஆட்சி நடைபெறுவதாக கடந்த காலத்தில் நாம் விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். ஆனால், தற்போது ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை அவ்வாறே பின்பற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அநுர விக்ரமசிங்க ஆட்சியா நாட்டில் நடைபெறுகிறதா என கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அது அவ்வாறு இல்லை என ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்.