ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 23 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3,819 கோடி ரூபா
பெறுமதியான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜெர்மனியில் நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் ‘டி என் ரைசிங் யுரோப்’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ‘டி என் ரைசிங் ஜெர்மனி’ முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 3,819 கோடி ரூபா மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் தமிழகத்தில் 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியில் மொத்தம் 26 ஒப்பந்தங்களின் மூலம் 7,020 கோடி ரூபா அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல முன்னணி நிறுவனங்கள் விரிவாக்கப் பணிகளுக்கான முதலீட்டுக்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழகம் கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ் பில்டங்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
120 மாணவர்களுடன் தொடங்கும் இந்த திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் 20,000 மாணவர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பல முதலீட்டாளர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்தார்.
