
சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை வெள்ளையடிப்பு செய்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், தோல்வியடையச் செய்துள்ளனர்.
இதன்மூலம், தென்னாப்பிரிக்கா இந்தியாவை இரண்டு முறை சொந்த மண்ணில் முழுமையாக வென்ற முதல் அணியாக மாறியது. முன்னதாக, 1999-2000 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில், 489 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா அணிக்காக செனுரான் முத்துசாமி 206 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள, மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 109 ஓட்டங்களை குவித்தார்.
இந்தியா அணிக்காக, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் ஆறு விக்கெட்டுகளையும், சைமன் ஹார்மர் மூன்று வெற்றிகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸின்படி, தென்னாப்பிரிக்கா 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றனர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதனால் இந்திய அணிக்கு 549 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இது ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணிலும் இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியா அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
மேலும், 13 மாதங்களில் ஒரு அணி சொந்த மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்றது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, 2024 ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
