வரி வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் – IMF வலியுறுத்தல்

48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அதன் வரி வசூல் இலக்குகளை அடைவது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
வரி இலக்குகள் முறையாக செயல்படுத்தப்பட்டால், இலங்கை 900 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருவாய் இலக்கை அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது என்றும், ஏற்கனவே உள்ள வரிகள் திருத்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த வருவாய் திரட்டும் கொள்கைகள் முறையாக செயல்படுத்தப்பட்டால், ஒரு வருடத்திற்குள் மேலும் இரண்டு நிவாரணப் பொதிகள் பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர் ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.