ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில்

ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் புதிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்மா நேற்று அறிவித்துள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கவே, கடந்த ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடருடன் சர்மா டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

எனினும், சொந்த நாட்டிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட போடர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சர்மா தலைமையிலான இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த தொடர்கள் முழுவதும் சர்மாவின் துடுப்பாட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. எனினும், இந்த ஆண்டு இடம்பெற்ற ஐசிசி சம்பியன் கிண்ணத்தை சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியிருந்தது.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்மா ஆரம்பத்தில் தடுமாறியிருந்தாலும், பின்னர் தனது அதிரடி ஆட்டங்களால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே, நேற்று திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்மா அறிவித்துள்ளார். சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவராக ஷுப்மன் கில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கும் கில், தனது திறமையான வழிநடத்தல் மூலம் புள்ளிப் பட்டியலில் அணியை முதலிடம் பிடிக்கச் செய்துள்ளார். இதனால் பலரின் கவனமும் கில் பக்கம் திரும்பியுள்ளது.

ஷுப்மன் கில் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒருபோதும் தலைமை தாங்கியதில்லை என்றாலும், அவர் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி ஹெடிங்லியில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரி முழுநேர டெஸ்ட் தலைவராக கில் நியமிக்கப்படுவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இந்த மாத இறுதியில் கூடும் போது அணியைத் தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டி இந்தியாவிற்கான அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) சுழற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், நீண்டகால தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவர் தங்களுக்குத் தேவை என்பதை தேர்வாளர்கள் உணர்ந்துள்ளனர்.

எனவே, 25 வயதான கில் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க மற்றும் பொருத்தமான தேர்வாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

Share This