கிராண்ட்பாஸ் இரட்டைக்கொலை – நால்வர் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் நேற்று (15) இருவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் சேதவத்தை, நவலோகபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இருவர் உட்பட ஐந்து பேர், நேற்று (15) அதிகாலை களனிதிஸ்ஸ கிராமப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்க முச்சக்கர வண்டியில் வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தக் குழு வந்தபோது, மற்றையக் குழுவைச் சேர்ந்தவர்கள் ரயில் பாதையில் அவர்களைத் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலையைச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சேதவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.