வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதியின் செலவு விபரங்கள் தொடர்பில் விளக்கம்

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதியின் செலவு  விபரங்கள் தொடர்பில் விளக்கம்

தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு குறைவாக செலவிடுவதை நாடாளுமன்றில் கேள்விக்குட்படுத்தாது கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் செலவிட்டுள்ளமை தொடர்பிலேயே ஆராய வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றில் வெளிப்படுத்தினார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதிகள் செலவிட்ட நிதியை ஒப்பிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு முதல் 2025
பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில்1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிட்டதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அது எவ்வாறு சாத்தியம் என கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அமைச்சர் நலிந்த
இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து மூன்று நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
என்பதைப் புரிந்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 3,572 மில்லியன் ரூபா செலவிட்டதை
இலகுவாக புரிந்துக்கொள்ள அவர்களால் முடிகிறது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு விமானக் கட்டணம் மற்றும் இராஜதந்திர பரிசுகளுக்காக 1.22 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

சீன விஜயத்திற்கான செலவை அந்த அரசாங்கமே ஈடுசெய்தது. ஜனாதிபதி செயலகம் 386,000 ரூபா மாத்திரமே செலவிட்டது.

ஐக்கிய அரபு இராச்சிய பயணத்திற்கான மொத்த செலவு 279,000 ரூபா மாத்திரமே. அதனையும் அந்த அரசாங்கம் ஈடுசெய்தது.

அதுமட்டுமல்ல அவ்வாறான விஜயங்களுக்கு ஜனாதிபதிக்கு அந்த நாடுகள் கொடுப்பனவும் வழங்குகின்றன.
அனுர குமார திசாநாயக்க தனது சீனப் பயணத்திலிருந்து பெற்ற 2,055 அமெரிக்க டொலர்களையும், துபாய் பயணத்தின் போது
பெற்ற 960 அமெரிக்க டொலர்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கே மீள ஒப்படைத்தார். முன்னாள் ஜனாதிபதிகள் இவ்வாறு செலுத்தியுள்ளனரா?

சேமிப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்குப் பதிலாக, கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் செலவிட்டமை தொடர்பில் ஆராய வேண்டும்”
என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Share This