கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகிய இருவர் உயிரிழப்பு

புத்தளம், நாரக்கல்லி பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நுரைச்சோலை பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்றொழிலாளர்கள், கடலில் மிதந்து வந்த மர்மமான திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து அதனை அருந்தியுள்ளனர்.
திரவத்தைக் பருகியதை தொடர்ந்து, ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் கடும் சுகவீனமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் குடித்த திரவம் மற்றும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
