வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பு- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பு-  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய
சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட கூட்டம் இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நாளை புதன்கிழமை காலை 08 மணிக்குள் கைது செய்யப்படாவிட்டால் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, ​​அவசர சேவைகள் தவிர்த்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வரலாற்றில் ஒரு மருத்துவ ஒருவர் எதிர்கொள்ளும் மிகவும் தீவிரமான மற்றும் மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என கூறிய அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலைகளில் ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 

Share This