புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு

முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எனது தனிப்பட்ட மற்றும் நெருக்கமான உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது எனக்குப் பிடிக்காது, ஆனால் நான் அதைச் செய்ய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.
“நேர்மையா சொல்ல வேண்டும் என்றால், ஆண்கள் அவர்களின் உடல்நலம் குறித்து பேசுவதில் அவ்வளவு கெட்டிக்காரர்கள் இல்லை. நாம் அனைத்தையும் தள்ளிப் போடுகின்றோம்.”
தற்போது எனக்கு இவ்வாறு நடந்துவிட்டது. இதற்காக குரல் கொடுக்க வேண்டும். எனது இந்த அனுபவத்தை கூறாவிட்டால் நான் மோசமாக உணருவேன்.
எனக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும், தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேமரூன் தனது கதையைப் பகிர்ந்து கொண்டதற்கும் “முக்கிய விழிப்புணர்வை” ஏற்படுத்தியதற்கும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இங்கிலாந்தில் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55,000 புதிய நோயாளர்கள் கண்டறியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புற்றுநோய் 75 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே மிகவும் பொதுவானது எனவும், ஆனால், 50 வயதுக்குட்பட்டவர்களில் இது அரிதானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
