முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

இளைஞர் அமைப்புகளை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இரு தரப்பினருக்கும் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க அமைச்சரிடம் இதன்போது யோசனை முன்வைத்தார்.
இலங்கை இளைஞர்களின் வேண்டுகோளுக்கமைய சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் இளைஞர் அமைப்புகளை ஆரம்பித்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கிராமத்தின் இளைஞர்களும் ஒன்று கூடும் இடமாக பொழுதுபோக்குகள், கலைகள் மற்றும் வேறு செயற்;பாடுகளுக்காக இளைஞர் அமைப்புகள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த இலக்கு வெற்றிகரமாக உள்ளதென தெரிவித்த ரணில் விக்ரமசிங்க இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்பதையும் சுட்டிக்காட்டினார்.
இளைஞர் அமைப்புகளிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளதாகவும் சிலர் வணிகங்களில் உள்ளதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய மாநாடு நடைபெறும் நிலையில் அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போராட்டங்கள் தொடர்ந்தால் , இளைஞர் சமூக அமைப்புகள் குறையும் என்றும் இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே தான் விசேட உரையாற்றியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.