கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கலென்பிந்துனுவெவ பிரதேச சபைத் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

அந்த காலப்பகுதியில், சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த அழைப்புக் கடிதத்தின் பேரில் முன்னாள் தலைவர் இலஞ்ச ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகாத காரணத்தினால், 2023 ஆம் ஆண்டின் இல. 09 இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 126 மற்றும் 127(1)(உ) பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் தலைவரை இன்று வெள்ளிக்கிழமை (24) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share This